VIEW series – Week 0: இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி என்றால் என்ன?

“நீங்க என்ன ஸ்பெஷலிஸ்ட்?”

“நீங்க ஆபரேஷன் பண்ண மாட்டீங்களா?”

“நீங்க ஆஞ்சியோகிராம் கூட பண்ணுவீங்களா?”

“அப்படியென்றால் நீங்க ஸ்கேன் தான் பாக்கறீங்களா?”

இதெல்லாம் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

நான் ஒரு இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட். இது என்ன வேலை என்று நிறைய பேருக்குத் தெரியாது. நாங்கள் சிகிச்சையளித்த நோயாளிகளுக்கே, தாங்கள் எப்படி சிகிச்சை பெற்றார்கள் என்று முழுமையாக புரிந்திருக்காது. மருத்துவத் துறையில் இருக்கும் பலருக்கே, எங்கள் துறையின் தன்மை, முக்கியத்துவம், நுணுக்கங்கள் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த வாராந்திர தொடரை துவங்குகிறேன்.

இந்த தொடரின் நோக்கம்:

நம்மில் பலருக்கே தெரியாத இந்த நவீன மருத்துவத் துறையை எளிமையாக அறிமுகப்படுத்துவதுதான் என் நோக்கம்.

இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி என்றால் என்ன?

இது சமீப காலத்தில் உருவெடுத்த ஒரு சிகிச்சை முறை. இதில் நாங்கள் அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, ஃப்ளூரோஸ்கோப்பி போன்ற ரேடியாலஜி கருவிகளின் உதவியுடன்,
உடலில் சிறிய துளைகள் (பஞ்சர்) மூலம் நுண்ணிய ட்யூப்கள் மற்றும் வயர்களை பயன்படுத்தி சிகிச்சையளிக்கிறோம்.

இவை:

  • வெட்டும்-தையலும் இல்லாத சிகிச்சைகள்
  • பெரும்பாலும் லோகல் அனஸ்தீசியா போதுமானது
  • சில நேரங்களில், அதே நாளிலேயே வீடு திரும்ப முடிகிறது. (Day-care procedure)

சில உதாரணங்கள்:

  • சர்க்கரை நோயாளிகளின் காலில் அடைப்பட்ட ரத்த நாளங்களை திறக்கலாம்
  • யூட்டரஸில் ஏற்படும் ஃபைப்ராய்ட்களை அறுவை சிகிச்சை இல்லாமல் சுருக்கலாம்
  • சாலை விபத்துகளில் உடலின் உள்பகுதியில் ஏற்படும் இரத்தக்கசிவை அறுவை சிகிச்சையில்லாமல் கட்டுப்படுத்தலாம்
  • கல்லீரல் சீழ் கட்டிகளை 4 mm துளையின் மூலம் வெளியேற்றலாம்

எங்களைப்பற்றித் தெரியாததற்கு காரணம்?

நாங்கள் பெரும்பாலும் பின்னணியில் வேலை செய்வதே இதற்கு ஒரு முக்கியமான காரணம். நோயாளிகள் எங்களை நேரடியாகச் சந்திப்பது அபூர்வம். அவர்கள் ஏற்கனவே கண்ட மருத்துவர் ஒருவர் எங்களை நோக்கி ரெஃபர் செய்கிறார். அதன் பிறகு தான் நாங்கள் நோயாளிகளை நேரில் பார்த்து சிகிச்சை அளிக்கிறோம்.

இந்தத் தொடர் எப்படி இருக்கும்?

ஒவ்வொரு வாரமும் (புதன் / வியாழன்) ஒரு நோயை எடுத்துக்கொண்டு, அதற்கான சிகிச்சையில் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி எப்படி பயனளிக்கிறது என்பதை ஒரு உண்மைக் கதை (Case study) மூலம் எடுத்துரைக்கப்போகிறேன்.

இந்த V.I.E.W. (Vascular Interventions, Every Week) தொடரின் வழியாக, இன்றைய மருத்துவத்தில், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உங்களுக்கு எளிதாக புரிய வைக்க முயற்சி செய்கிறேன்.

உங்களுக்கு இது பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Reply